PublicNewsTv-இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வு கேட்டு விராட் கோலி பேச்சுவார்த்தை!?.

PublicNewsTv-இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வு கேட்டு விராட் கோலி பேச்சுவார்த்தை!?.

PUBLISHED:29-Nov-2017

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வு தொடர்பாக கேப்டன் விராட் கோலி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள முன்னணி வீரர்களுக்கு வருடாந்திர சம்பள ஒப்பந்தம் இந்த ஆண்டு ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டிருந்தது. ஆனால் இந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என இந்திய அணி நிர்வாகம், பிசிசிஐ உடன் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வலியுறுத்தியது. ஐபிஎல் டி20 தொடரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் ரூ.16, 347 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இதன் வாயிலாக பிசிசிஐ பெருமளவு லாபம் ஈட்டியுள்ளதால், இந்திய வீரர்கள் சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. வீரர்களின் சம்பள ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் பேச்சுவார்த்தையில் சம்பள உயர்வு முக்கியமான கருப்பொருளாக இடம் பெற்றிருந்தது. இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, “வீரர்கள் சம்பள உயர்வு கோருகின்றனர். இதுதொடர்பாக மகேந்திர சிங் தோனி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருடன் இணைந்து விராட் கோலி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளார். இவர்கள் பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவரான வினோத் ராயை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்த ஆலோசனையின் போது சம்பள உயர்வு மற்றும் அதிக அளவிலான போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடுவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்திய அணி வீரர்களுக்கு தற்போது 3 வகையான சம்பள பட்டியல் உள்ளது. இதில் கோலி மற்றும் சீனியர் வீரர்கள் உயர் நிலையில் உள்ளனர். இதுதொடர்பாக வினோத் ராய் கூறும்போது, “சம்பள பட்டியலை மாற்றியமைக்க உள்ளோம். வீரர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு அதற்கான வழிமுறைகளை தொடங்கி உள்ளோம். தற்போது வரை இருமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். டெல்லி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அடுத்த சுற்று பேச்சுவார்த்தையையும் நடத்தி விடுவோம்” என்றார்.

இலங்கை அணிக்கு எதிரான தொடரை வரும் 24-ம் தேதி நிறைவு செய்யும் இந்திய அணி அதன் பின்னர் 28-ம் தேதி தென் ஆப்பிரிக்காக புறப்பட்டுச் செல்கிறது. அங்கு இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி, 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஜனவரி 5-ம் தேதி தொடங்குகிறது. முன்னதாக இந்திய அணி இரு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் டிசம்பர் 30-ம் தேதி நடைபெறுகிறது. - ஏஎப்பி




Recommended For You