'ஒக்கி' புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு உதவிகள் செய்யத் தயார் என்று முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் குறித்தும், தமிழக அரசு மேற்கொண்டுள்ள மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்தும் முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் விரிவாகக் கேட்டறிந்தார். அதற்குப் பிறகு, ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு உதவிகள் செய்யத் தயார் என்று முதல்வர் பழனிசாமியிடம் மோடி உறுதி அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஒக்கி புயல் சேதங்கள் குறித்து தமிழக அரசின் சார்பில் ஓர் அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு விரைவில் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள 'ஒக்கி' புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி 16 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. சூறைக்காற்றால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள், 950 மின்கம்பங்கள் சாய்ந்தன. 4 பேர் பலியாகினர். பல வழித்தடங்களில் போக்குவரத்து முடங்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.
தென்கிழக்கு வங்கக் கடலில் குமரி கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக உருவெடுத்துள்ளது. குமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ள இந்த புயலுக்கு 'ஒக்கி' (ockhi) என பெயரிடப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக நேற்று அதிகாலை 2 மணி முதல் குமரி மாவட்டம் முழுவதும் பலத்த சூறைக்காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.
இரவும், பகலுமாக இடைவிடாது கடும் சத்தத்துடன் காற்று வீசியது. கடற்கரை கிராமங்களில் காற்றின் வேகத்தால் வீட்டுக் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. கடற்கரையிலும், மீன்பிடி தளங்களிலும் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தூக்கி வீசப்பட்டன. மாவட்டத்தின் உட்பகுதியிலும் காற்றின் வேகத்தால் கடும் சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடி தமிழக முதல்வர் கே.பழனிசாமியிடம் ஒக்கி புயலால் தமிழகத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்ததோடு, தமிழகத்துக்கு உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.