புதுடில்லி:-
‛முத்தலாக்' மசோதா சட்டமானால் முஸ்லிம் பெண்களுக்கு துயரம் எனவும் அந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் எனவும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வலியுறுத்தியுள்ளது.
மனைவியை, 'தலாக்' என, மூன்று முறை கூறி, விவாகரத்து செய்யும் வழக்கம், முஸ்லிம்கள் இடையே உள்ளது. இதை எதிர்த்து, பல முஸ்லிம் பெண்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆக., 22ல், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'முத்தலாக், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது' என, கூறியது.
ஒப்புதல்:
இதையடுத்து, முத்தலாக் விவாகரத்தை, தண்டனைக்குரிய குற்றமாக்க வகை செய்யும் மசோதா தயாரிக்கப்பட்டு அதற்கு, மத்திய அமைச்சரவை, ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா, நடப்பு பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
முஸ்லிம் பெண்களுக்கு துயரம்:
இந்நிலையில் முத்தலாக் தடை சட்டம் நம் நாட்டின் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் இந்த மசோதா சட்டமானால் முஸ்லிம் பெண்களுக்கு துயரம் ஏற்படும் எனவும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் இம்மசோதா குறித்து எந்த முஸ்லிம் அமைப்புடனும் மத்திய அரசு விவாதிக்கவில்லை எனவும், இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.