பீஹாரில் காப்பகத்தில் 20 சிறுமிகள் பலாத்காரம் பலர் கொன்று புதைக்கப்பட்டதாக புகார்
பாட்னா:-
பீஹாரில் காப்பகத்தில் 20 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதில் சிறுமிகள் சிலர் கொன்று புதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பீஹார் மாநிலம் முஷாபர்நகரில் அரசு நிதி உதவியுடன் சிறுமிகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கிப் படித்து வருகின்றனர்.
மும்பையைச் சேர்ந்த தணிக்கை நிறுவனம் காப்பகத்தினை ஆய்வு செய்ததில், காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட சிறுமிகள் அங்குள்ள ஊழியர்களால் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
சில சிறுமிகள் கொன்று புதைக்கப்பட்டனர் என புகார் கூறியது,இதையடுத்து, போலீசார் மண் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் தோண்டினார்கள், உடல் ஏதும் கிடைக்கவில்லை.
இது குறித்து முஷாபர்பூர் போலீஸ் எஸ்பி ஹர்பிரீத் கவுர் கூறுகையில், இந்தக் காப்பகத்தில் தங்கியிருக்கும் சிறுமிகளிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கூறிய தகவலின்படி குறிப்பிட்ட இடத்தை தோண்டி ஆய்வு செய்தோம் ஆனால்,அந்த இடத்தில் எந்தவிதமான உடலும் கிடைக்கவில்லை.
ஆனால், அந்த இடம் மட்டுமல்லாமல் தொடர்ந்து பல இடங்களில் தோண்டி ஆய்வு செய்ய இருக்கிறோம்.
மேலும் 40 சிறுமிகளிடம் மருத்துவப் பரிசோதனை நடத்தியதில், 16-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி, பெண் ஊழியர்கள் என மொத்தம் 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கு மீட்கப்பட்ட சிறுமிகள் வேறுவேறு காப்பகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றார்.