PUBLIC NEWS TV-பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் இளம்பெண் உட்பட 4 பேர் கைது.

PUBLIC NEWS TV-பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் இளம்பெண் உட்பட 4 பேர் கைது.

PUBLISHED:12-Jan-2018

கோவையில் திருமண தகவல் மையம் மூலம் பல பெண்களை மணம் புரிந்து ஏமாற்றிய நபர் குறித்த செய்தி சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல பல ஆண்களை ஏமாற்றி சுமார் ரூ.1.5 கோடி வரை மோசடி செய்ததாக இளம்பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாநகர போலீஸார் தெரிவித்துள்ளதாவது: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன்(27). ஜெர்மனியில் பணியாற்றும் பொறியாளரான இவருக்கு குடும்பத்தினர் வரன் தேடி வந்துள்ளனர். தனியார் திருமண தகவல் மையத்தின் இணையதளத்தில் இவரது விவரங்களைத் தெரிந்து கொண்டு கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சித்ரா(47) என்பவரது மகள் ஸ்ருதி (எ) மைதிலி வெங்கடேஷ்க்கு மணம் முடிக்க தொடர்பு கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து முகநூல், வாட்ஸ்அப் மூலம் ஸ்ருதியும், பாலமுருகனும் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, இரு வீட்டாரும் மணம் முடிப்பது என உறுதி செய்திருந்த நிலையில், தனது தாயாரின் மருத்துவச் செலவுக்கு எனக்கூறி பாலமுருகனிடம் இருந்து ரூ.41 லட்சம் வரை ஸ்ருதி பெற்றதாக புகார் எழுந்தது. பணம் திரும்பக் கிடைக்காத நிலையில், ஏமாற்றமடைந்த பாலமுருகன் கடந்த வாரம் கோவை மாநகர போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில், ஸ்ருதியின் தந்தை எனக் கூறப்படும் விருதுநகரைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ்(38), தாயார் எனக் கூறப்படும் சித்ரா (எ) அமுதா வெங்கடேஷ்(47), ஸ்ருதி (எ) மைதிலி வெங்கடேஷ்(21), அவரது தம்பி எனக் கூறப்படும் சுபாஷ்(19) ஆகியோர் மீது மாநகர சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

போலீஸ் மீது தாக்குதல்

ஏற்கெனவே இவர்கள் மீது மாநகர குற்றப்பிரிவு போலீஸில் வழக்குகள் இருப்பதால், நேற்று முன்தினம் குற்றப்பிரிவு போலீஸார் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள சித்ராவின் வீட்டுக்கு விசாரணைக்காகச் சென்றனர். ஆனால் அப்போது அங்கிருந்த நபர்கள் போலீஸாரைத் தாக்கினர். அதில் காவலர் சாகுல் என்பவர் காயமடைந்தார். இந்த தாக்குதல் தொடர்பாக குற்றப்பிரிவு போலீஸார் அளித்த புகாரின் பேரில் மேற்கண்ட நால்வரோடு, அங்கிருந்த சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சபரிநாத்(23) என்ற இளைஞர் என 5 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

பலரிடம் பல லட்சம் மோசடி

இந்த கும்பல், கடந்த 2016-ல் நாமக்கல் பரமத்திவேலூரைச் சேர்ந்த சந்தோஸ்குமாரை மற்றொரு திருமண உதவி மைய இணையத்தில் அடையாளம் கண்டு வரன் தேடுவதுபோல பேசி ரூ.43 லட்சம் ஏமாற்றியுள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது.

மேலும், நாமக்கல்லைச் சேர்ந்த சசிகுமார் என்பவரிடம் ரூ.22 லட்சம், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவரிடம் ரூ.15 லட்சம், சிதம்பரத்தைச் சேர்ந்த அருண் குமரகுருராஜா என்பவரிடம் 20 பவுன் நகை, திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவரிடம் ரூ.21 லட்சம் ஏமாற்றியுள்ளனர். வங்கி மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர். இதுமட்டுமின்றி சென்னை மத்திய குற்றப் பிரிவு, நாகை மாவட்ட குற்றப் பிரிவுகளிலும் இவர்கள் மேல் வழக்குகள் உள்ளதாக தெரியவந்தது.

இதையடுத்து, 4 பேரையும், மோசடிப் புகாரில் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீஸாரைத் தாக்கிய புகாரில் சபரிநாத்தை விசாரித்து வருகின்றனர்.




Recommended For You