Public News Tv Tamil - திருவொற்றியூர் சூறை மீன்பிடித் துறைமுகத்தில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு.!

Public News Tv Tamil - திருவொற்றியூர் சூறை மீன்பிடித் துறைமுகத்தில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு.!

PUBLISHED:10-Oct-2023

சென்னை திருவொற்றியூரில் அமைக்கப்பட்டு வரும் சுரை மீன்பிடித் துறைமுகம் வரும் டிசம்பர் மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்தார்.

மத்திய மீன்வளத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘சாகர் பரிக்ரமா’ திட்டத்தின் கீழ் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மூன்று நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை தமிழகத்திற்கு வருகை தந்தார்.

மூன்றாவது நாளான திங்கள்கிழமை தனது பயணத்தை விழுப்புரம் மாவட்டம் அனுமந்தை மீனவ கிராமத்தில் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பட்டினம், மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் மீனவர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளைக் கேட்டறிந்ததார்.

சென்னைத் துறைமுகத்தில் ஆய்வு:

சென்னைத் துறைமுகத்தில் திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசு சார்பில் மீனவர் நலன், மீன்பிடித் தொழில், கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்த பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மத்திய, மாநில அதிகாரிகளிடம் அமைச்சர் ரூபாலா கேட்டறிந்தார்.

அப்போது  மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழ்நாட்டில் சாகர் பரிக்ரமா பயணம் சிறப்பாக அமைந்தது எனக் குறிப்பிட்டார் அமைச்சர் ரூபாலா.

இதனையடுத்து திருவொற்றியூர் சென்ற அமைச்சர் ரூபாலா அங்கு கட்டப்பட்டு வரும் ரூ. 210 கோடி மதிப்பீட்டிலான சூரை மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறி்த்தும், மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது மீனவர்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் கடன் அட்டைகளை பயனாளிகளுக்கு அமைச்சர் ரூபாலா வழங்கினார்.

திருவொற்றியூர் மீன்பிடித் துறைமுகம் டிசம்பரில் திறப்பு:

காசிமேடு மீன்பிடித்துறைமுக ஆய்வுப் பணிகளுக்குப் பிறகு அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது,

திருவொற்றியூரில் கட்டமைக்கப்பட்டு வரும் சூரை மீன் மற்றும் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகத்தின் கட்டுமானப் பணிகள் சுமார் 95 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வரும் டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். மேலும் இத்துறை முகத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு மத்திய மீன்வளத் துறை சார்பில் நிதி ஒதுக்குவது குறித்து பரிசீலிக் கப்படும்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில்தான் மத்திய அரசில் மீன்வளத்துறைக்கென தனி அமைச்சகம் அமைக்கப்பட்டது. தற்போது விவசாயிகளைப் போலவே மீனவர்களுக்கும் கிசான் கடன் அட்டை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கு மீனவர்கள் வாங்கும் கடனுக்கு 7.5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். கடனை குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் நபர்களுக்கு 3 சதவீதம் ஊக்கத் தொகையாகத் திருப்பி அளிக்கப்படும்.

இறால் மற்றும்  நீர்வாழ் உயிரின குஞ்சு பொரிப்பகங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய திருத்தச் சட்டம் 2023 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான். மத்திய அரசு அளிக்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் எவ்வித இடைத்தரகர்களும் இன்றி பயனாளிகளுக்கு நேரடியாகச் சென்றடைகிறது. என்றார் ரூபாலா.

ஆய்வின்போது வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி,  சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.சங்கர்  , ஜே.ஜே.எபினேசர் , ஆர்.மூர்த்தி மற்றும் சென்னை துறைமுகத்தலைவர் சுனில் பாலிவால் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அரசியல் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.




Recommended For You