Public News Tv Tamil - பயிற்சி டி.எஸ்.பி., மீது தவறில்லை.. புகார் மனு வாபஸ்....

PUBLISHED:06-Apr-2022

பயிற்சி டி.எஸ்.பி., மீது தவறில்லை.. மனு வாபஸ்...

திருச்சி, ஏப்‌. 6- 

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலை சேர்ந்த மாணவி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 

கல்லூரி விடுமுறையொட்டி எழும்பூரில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு ஏப்ரல் 1ம் தேதி புறப்பட்டுச் சென்றார்.

அப்போது ரயிலில் நடந்த சம்பவம் குறித்து திருச்சி ரயில்வே போலீசில் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நான் என் அம்மாவுடன், சங்கரன்கோவிலில் உள்ள கரிவலம் வந்தநல்லூர், பம்ப் தெருவில் வசித்து வருகிறோம். 

நான் விடுமுறைக்காக ஏப்., 1ம் தேதி, சென்னை எக்மோரில் இருந்து, சங்கரன் கோவிலுக்கு பொதிகை ரயிலில் ஏசி கோச்சில் பயணித்தேன்.

அதே ரயிலில் எனது படுக்கையின் எதிர்புறம் இருந்த மகேஷ் குமார் என்பவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என டிடியிடம் தெரிவித்தேன்.எங்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கோபத்துடன் அவரை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன்  டி.டி.ஆர் எழுதித்தர கேட்டதால் நானும் தகவலுக்காக எழுதிக் கொடுத்தேன்.

 உடனே டி.டி.யும் ரயில்வே பணியில் இருந்த போலீசும் மகேஷ்குமாரிடம் விசாரித்தனர். அதில் அவர் இயற்கை உபாதை கழிக்க மேல் படுக்கையிலிருந்து கீழே இறங்கும் போது தவறுதலாக கை எதிர்பாரதவிதமாக பட்டு விட்டதாக, எனக்கு எந்தவிதமான தவறான எண்ணம் இல்லை என கூறி மன்னிப்பு கேட்டார்.

எனக்கு இது தொடர்பாக புகார் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. உடனே டி.டி.இ மாற்றுபடுக்கை ஏற்பாடு செய்து கொடுத்தார். நான் நல்ல முறையில் பயணம் செய்து வீட்டிற்கு வந்தேன்.

வீட்டுக்கு வந்தவுடன் நடந்த விவரங்களை என் அம்மாவிடம் தெரிவித்தேன். என் அம்மா எந்தவிதமான புகார் அளிக்க வேண்டாம் என கூறினார்.

மகேஷ்குமார் என்பவரின் கை எதேச்சியாக மட்டுமே என் மீது பட்டது. எனவே எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். 

இந்த புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் தேவையில்லை. என் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்.துணை காவல் கண்காணிப்பாளர் மீது எந்தவொரு தவறுமில்லை அவர் பாலியியல் ரீதீயாக தொல்லை தரவுமில்லை.எதேச்சையாக நடந்து விட்ட ஒரு நிகழ்வு அவ்வளவு தான்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Recommended For You