உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்.

PUBLISHED:05-Sep-2017

 

கோவை வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஜி.கே.வாசன் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அரசு முன்வரக்கூடாது. மணல் தட்டுப்பாட்டை நீக்க அரசு முன்வரவேண்டும். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோர்ட்டு உத்தரவுப்படி நவம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். எனவே திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தலை நடத்த த.மா.கா. வலியுறுத்துகிறது. உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் வகையில் கட்சியை தயார்படுத்தும் பணியில் நாங்கள் பல மாதங்களாக செயலாற்றி வருகிறோம். இதற்காக தொடர் சுற்றுப்பயணம் செய்து வருகிறோம். உள்ளாட்சி தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும்.

நடிகர் கமல்ஹாசன் அதிகாரபூர்வமாக அரசியலுக்கு வரட்டும். அதன் பின்னர் அதுபற்றி கருத்து சொல்லப்படும். தமிழகத்தில் விவசாயிகள் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, ஜி.எஸ்.டி.யால் விலை வாசி உயர்வு போன்றவற்றில் மத்திய அரசு தாராள மனதோடு செயல்பட வேண்டும். அண்டை மாநிலங்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தரவில்லையென்றால் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட்டு அதை தீர்த்து வைக்க வேண்டும்.

எந்த கட்சி மக்களின் நம்பிக்கையை பெறுகிறதோ அந்த கட்சி தான் வளர முடியும். அ.தி.மு.க.வில் உள்ள குளறுபடிகள், குழப்பங்கள் மக்களுக்கு தெரியும். அதை பா.ஜனதா பயன்படுத்திக்கொண்டுள்ளது. அ.தி.மு.க.வில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். தமிழக மக்களின் நலனுக்காக அந்த கட்சியில் உள்ள பிரச்சினைகளை அவர்களே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.




Recommended For You