PublicNewsTv-நெல்லையில் கந்துவட்டியால் பாதிக்கப்படுவோருக்கு உதவ ‘ஹெல்ப் லைன்’ தொடங்கப்பட்டது.

PublicNewsTv-நெல்லையில் கந்துவட்டியால் பாதிக்கப்படுவோருக்கு உதவ ‘ஹெல்ப் லைன்’ தொடங்கப்பட்டது.

PUBLISHED:25-Oct-2017

நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டியால் பாதிக்கப்படுவோருக்கு உதவ ‘ஹெல்ப் லைன்’ தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே 7 புகார்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நெல்லை மாவட்டத்தில் கந்து வட்டி, மீட்டர் வட்டி, வார வட்டி, நாள் வட்டி உள்ளிட்ட அதிக வட்டி வசூல் செய்து, பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துபவர்கள் தொடர்பாக புகார்களை தெரிவிக்க 96297 11194 என்ற செல்போன் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

கந்து வட்டி, மீட்டர் வட்டி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்களது புகார்களை இந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பதிவு செய்யப்பட்ட புகாரின் மீது உடனடியாக வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து கூட்டாக விசாரணை மேற்கொண்டு விரைந்து தீர்வு காணப்படும்.

பாதிக்கப்பட்டோரின் புகாரின் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு, கந்து வட்டி சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும். எனவே, தற்கொலை உள்ளிட்ட தவறான முடிவுகளை யாரும் எடுக்க வேண்டாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஹெல்ப் லைன் தொடங்கப்பட்ட நேற்று முதல் நாளிலேயே, மாலை 6 மணி வரை இந்த எண்ணுக்கு நெல்லை வட்டத்தில் இருந்து மட்டும் 7 புகார்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 




Recommended For You