PUBLIC NEWS TV - பெண் வயிற்றில் உடைந்த ஊசி - மருத்துவர் செவிலியர் பணியிடை நீக்கம்..!

PUBLIC NEWS TV - பெண் வயிற்றில் உடைந்த ஊசி - மருத்துவர் செவிலியர் பணியிடை நீக்கம்..!

PUBLISHED:21-Nov-2019

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே உள்ள மரவெட்டி வலசையைச் சேர்ந்தவர் கார்த்தி, கட்டிட தொழிலாளி.

இவரது மனைவி ரம்யா (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன.

கடந்த 19-ந்தேதி உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரம்யாவுக்கு சுகப்பிரசவம் நடந்தது.

அதன்பிறகு அவருக்கு ரத்தக்கசிவும் வயிற்று வலியும் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ரம்யாவுக்கு ‘ஸ்கேன்’ எடுக்கப்பட்டது.

இதில் தையல் போடப்பட்ட பகுதியில் உடைந்த ஊசி இருப்பது தெரியவந்தது.

உடனடியாக ரம்யா, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரது உறவினர்கள், இன்று காலை உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பிரசவத்தின்போது தையல் போட்ட செவிலியர்கள், ஊசியை உடலில் வைத்து தைத்து விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் சம்பவ இடம் விரைந்தனர்.

இது தொடர்பாக இராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் குமரகுருபரன் கூறியதாவது:-

பிரசவத்தின்போது பெண்களுக்கு தையல் போடுவது வழக்கம்.

ரம்யாவுக்கு அப்படி போடும்போது தையல் ஊசியில் பாதி உடைந்துள்ளது.

இது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு தற்போது ஆபரேசன் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மாவட்ட தாய்-சேய் நல அலுவலர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரடியாக தொடர்பு கொண்டு ரம்யாவுக்கு உரிய சிகிச்சை அளிக்க பரிந்துரைந்துள்ளார்.

விசாரணைக்கு பின்னர் தவறு நடந்திருப்பது தெரிய வந்ததால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.




Recommended For You