PUBLICNEWSTV - 5 சவரன் நகைக்காக அக்காவை கொன்று பாறாங்கற்களால் சடலத்தை மறைக்க முயற்சி செய்த தம்பி கைது.

PUBLICNEWSTV - 5 சவரன் நகைக்காக அக்காவை கொன்று பாறாங்கற்களால் சடலத்தை மறைக்க முயற்சி செய்த தம்பி கைது.

PUBLISHED:29-Jul-2018

ஈரோட்டில்  5 பவுன் நகைக்காக அக்காவை கொன்ற தம்பி கைது  பாறாங்கற்களால் சடலத்தை மறைக்க முயற்சி

சென்னிமலை  ஈரோடு சென்னிமலையில், 5 பவுன் நகைக்காக அக்காவை கொலை செய்த வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை நெசவாளர் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து.

இவரது மகன் தனசேகர் (24). இவர் நிரந்தர வேலையில்லாமல் கிடைத்த வேலைகளை செய்து வந்துள்ளார்.

இதே காலனியில் வசிக்கும் ஆறுமுகம் மனைவி சிந்து (27)ஆறுமுகம் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்திலும், சிந்து சென்னிமலையில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் பணியாற்றினர்.

இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

தனசேகர், சிந்துவுக்கு தம்பி முறை உறவினர் ஆவார்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனசேகரிடம் ஆறுமுகம் குடும்ப செலவுக்கு ரூ.5000 கடனாக கேட்டுள்ளார்.

அவரும் ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் காலையில், ஆறுமுகத்தை தொடர்பு கொண்ட தனசேகர், `தோப்புபாளையத்தில் நண்பர் ஒருவர் பணம் தருவதாக சொல்லியிருக்கிறார்.

நீங்களோ அல்லது சிந்துவோ நேரில் வரவேண்டும்’ என்று கூறினார். இதனால் ஆறுமுகம், சிந்துவை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து, சிந்து வேலை செய்யும் நிறுவனத்துக்கு போய் அவரை பைக்கில் அழைத்து சென்றுள்ளார்.

இதன்பிறகு, மாலை 3 மணியளவில் ஆறுமுகத்தை சந்தித்த தனசேகரன், பணம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்துவிட்டு, அக்காவை பனியம்பள்ளி பிரிவில் பஸ் ஏற்றிவிட்டேன்’ என்று கூறியுள்ளார். ஆனால் சிந்து இரவு ஆகியும் வீட்டுக்கும் வரவில்லை.

செல்போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த ஆறுமுகம் மற்றும் உறவினர்கள் தனசேகரனிடம் விசாரித்துள்ளனர்.

அவர் குடிபோதையில் இருந்ததோடு, முன்னுக்கு பின் முரணாக பேசியதால், சென்னிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரித்தபோது 5 பவுன் நகைக்காக சிந்துவை கொன்று, ஊத்துக்குளி அருகே உள்ள வனப்பகுதியில் பிணத்தை மறைத்து வைத்ததாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து நேற்று, சிந்துவின் சடலத்தை மறைத்து வைத்திருந்த இடத்தை தனசேகரன் அடையாளம் காட்டினார்.

அங்கு பாறாங்கற்களால் பாதி மூடப்பட்ட நிலையில் சிந்துவின் சடலம் கிடந்தது.

சம்பவ இடத்திற்கு பெருந்துறை டி.எஸ்.பி. ராஜ்குமார் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சென்று ஆய்வு செய்தனர்.

சிந்துவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

நகைக்காக அக்காவை தம்பியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Recommended For You