PUBLICNEWSTV-தான பூமியில் வசிப்பவர்களுக்கு பட்டா – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி…!

PUBLICNEWSTV-தான பூமியில் வசிப்பவர்களுக்கு பட்டா – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி…!

PUBLISHED:15-Nov-2018

ஈரோடு:-

தான பூமியில் வசிப்பவர்களுக்கு ஜனவரி மாத இறுதிக்குள் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரூ.16.53 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளை பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்ததாவது:-

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஒன்றியம், குண்டேரிப்பள்ளம் அணையின் அருகில் கிணறு அமைத்து ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் 17 ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி கிராமங்களுக்கு 24 மணிநேரமும் சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்படும். மோதூர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரூ.15.16 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் ஓடையின் குறுக்கே மூன்று தடுப்பணைகள் தலா ரூ.3.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கவுள்ளது. பவானி முதல் மேட்டுப்பாளையம் வரை நான்கு வழிச்சாலை திட்டப்பணிகள் பிப்ரவரி மாதம் தொடக்கப்படவுள்ளது. 100 வருடங்களுக்கும் மேல் சாலை வசதியின்றி தவித்து வரும் விளாங்கோம்பை மலைவாழ் கிராமத்திற்கு ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்கப்படவுள்ளது. வினோபாநகரில் தான பூமியில் வசித்து வருபவர்களுக்கு ஜனவரி மாதம் இறுதிக்குள் வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கர்பாளையம் ஊராட்சி, குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில் கொங்கர்பாளையம், அரக்கன்கோட்டை, புள்ளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு ரூ.103.36 லட்சம் மதிப்பீட்டில் உறைகிணறு அமைத்து தடையில்லாத பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தினை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்து, அரக்கன்கோட்டை ஊராட்சி வடக்கு மோதூரில் தமிழ்நாடு குடிசை பகுதி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு ரூ.15.16 கோடி மதிப்பீட்டில் 180 குடியிருப்பு கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டும் பணிக்கும்,

அரக்கன்கோட்டை ஊராட்சி வடக்கு மோதூர் மயானக்குட்டையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் சிறிய கான்கிரீட் தடுப்பணை கட்டும் பணிக்கும், புள்ளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.64 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிக்கும், புள்ளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி தமிழ்நாடு கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12.18 லட்சம் மதிப்பீட்டில் 8.6 கி.மீ எம்.ஏ.பி மெயின் ரோடு முதல் வேட்டுவன்புதூர் செல்லும் சாலை வரை புதிய சாலை பணிக்கும் என மொத்தம் ரூ.16.53 கோடி மதிப்பீட்டிலான 4 புதிய திட்டப்பணிகளுக்கு பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், உதவி செயற்பொறியாளர் (குடிசை மாற்று வாரியம்) அசோகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




Recommended For You