அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில்
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி தலைமை வகித்தார்.
அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி முதல்வர் பி.பாலாஜி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி இயக்குனர் டி.சபிதா, எழுத்தாளர் சகுந்தலா ராஜசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
மார்பக புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தவர்கள், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பி.பாலாஜி ஆகியோர் நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.
எழுத்தாளர் சகுந்தலா ராஜசேகரன் எழுதிய "கேன்சரும் கடந்து போகும்" என்ற நூலினை சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர். சித்தாலட்சுமி வெளியிட, முதல் நூலினை மருத்துவக்கல்லூரி இயக்குனர் டி.சபிதா பெற்றுக்கொண்டார்.
மார்பக புற்றுநோய் தாக்கத்திலிருந்து பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்வது பற்றிய விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 1983-ஆம் ஆண்டு முதல் கதிர்வீச்சு புற்று நோயியல் துறையும், 1989-ஆம் ஆண்டு முதல் மருத்துவ புற்றுநோயில் துறையும் செயல்பட்டு வருகின்றது.
மேலும் புற்றுநோய் அறுவை சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு நிபுணர்கள் மே 2019 முதல் இம்மருந்துவமனையில் சேவை புரிந்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 1700 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 10 வருடங்களில் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 1205 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் புற்றுநோயில் துறையில் உயர் படிப்பு (4DM) துவக்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது என்கின்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 11 கோடி மதிப்பிலான சிகிச்சை கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் இம்மருந்துவமனையில் அளிக்கப்பட்டு வருவதாக ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி முதல்வர் பி. பாலாஜி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மார்பக புற்றுநோய் மருத்துவத்துறை பேராசிரியர்கள், துறைத் தலைவர் டாக்டர் நவீன்ராவல், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ரமேஷ், துணை முதல்வர், நிலைய மருத்துவ அலுவலர், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், செவிலியர் கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.