PublicNewsTv-சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு அரசு சார்பில் அண்ணா பதக்கம் அறிவிப்பு.

PublicNewsTv-சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு அரசு சார்பில் அண்ணா பதக்கம் அறிவிப்பு.

PUBLISHED:14-Sep-2017

பேறறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள், பணியாளர்கள் என 128 பேருக்கு தமிழக அரசு சார்பில் அண்ணா பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழகத்தில் காவல், தீயணைப்பு, சிறைத்துறைகள், ஊர்க்காவல்படை மற்றும் விரல்ரேகை பிரிவினர் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாளை  முன்னிட்டு தமிழக முதல்வரின் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தாண்டு காவல்துறையில் எஸ்பி முதல் முதல்நிலை காவலர் வரை 100 அலுவலர்கள், தீயணைப்புத்துறையில்துணை இயக்குனர் முதல் தீயணைப்பு வீரர் வரை 10 பேருக்கும், சிறைத்துறையில் துணை சிறை அலுவலர் முதல் முதல் நிலை சிறைக்காவலர் வரை 10 பேருக்கும், ஊர்க்காவல்படையில் 6 பேருக்கும், விரல் ரேகைப் பிரிவில் ஒரு எஸ்பி, ஒரு டிஎஸ்பி என 128 பேருக்கு அவர்களின் மெச்சத்தகுந்த பணியை அங்கீகரிக்கும் வகையில், 'தமிழக முதல்வரின் அண்ணா பதக்கங்கள்' வழங்க முதல்வர் கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பதக்கங்கள் பெறுவோர் அவர்தம் பதவிக்கேற்ற வகையில், பதக்க விதிகள் படி ஒட்டுமொத்த மானிய தொகையும் வெண்கல பதக்கங்களும் வழங்கப்படுகிறது. பின்னர் நடக்கும் விழாவில் முதல்வர் பதக்கங்களை வழங்குவார்.

கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு கொலை, கொள்ளை, திருட்டு, சங்கிலி பறிப்பு ஆகிய குற்றங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த ராமையா என்ற ரமேஷை கடந்தாண்டு நவம்பர் 6-ம் தேதி நெல்லை மாவட்டம், கங்கை கொண்டான் காவல்நிலைய சிறப்பு சார் ஆய்வாளர் பா.திருமலை நம்பி பிடித்தார். அப்போது, இரும்புக் கம்பி கொண்டு ரமேஷ் தாக்கினார். அதில், திருமலை நம்பியின் இடதுதொடையில் காயம் ஏற்பட்டது. அவரது வீரதீரச் செயலை பாராட்டி, முதல்வரின் வீரதீரச் செயலுக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




Recommended For You