PUBLIC NEWS TV- காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு.

PUBLIC NEWS TV- காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு.

PUBLISHED:24-Sep-2017

 

புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில், காய்கறிகளின் தேவை  அதிகரித்ததன் காரணமாக அவற்றின் விலை உயர்ந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் நேற்று அவரைக்காய் கிலோ ரூ.90-க்கும், பீன்ஸ் ரூ.75-க்கும் விற்கப்பட்டு வருகின்றன.

புரட்டாசி மாதம் தொடங்கியதன் காரணமாக, வீடுகளில் அசைவ உணவு உண்பது குறைந்து, சைவ உணவு உண்பது அதிகரித்துள்ளது.

மேலும் இம்மாதத்தில் நவராத்திரி விழா, ஆயுதபூஜை உள்ளிட்ட விழாக்களும் வருகின்றன. அதனால் சென்னையில் பொதுமக்களின் காய்கறித் தேவை அதிகரித்து, அவற்றின் விலை உயர்ந்துள்ளன.

கடந்த வாரம் கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்டு வந்த அவரைக்காய், நேற்று ரூ.90-க்கு விற்கப்படுகிறது. ரூ.30-க்கு விற்கப்பட்ட பீன்ஸ், நேற்று ரூ.75-க்கு விற்கப்படுகிறது.

ரூ.50-க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் ரூ.70-க்கு விற்கப்படுகிறது. மேலும் வெண்டைக்காய் ரூ.18, முள்ளங்கி ரூ.33, முட்டைக்கோஸ் ரூ.18, பீட்ரூட் ரூ.20, பச்சை மிளகாய் ரூ.30 என விலை உயர்ந்துள்ளது.

விலையில் எந்த மாறுதலும் இன்றி, தக்காளி ரூ.15-க்கும், வெங்காயம் ரூ.22-க்கும், உருளைக்கிழங்கு ரூ.14-க்கும், கேரட் ரூ.25-க்கும், புடலங்காய் ரூ.15-க்கும் விற்கப்பட்டு வருகின்றன.




Recommended For You