PUBLIC NEWS TV- பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கபாலத்தில் பேருந்து விபத்து.

PUBLIC NEWS TV- பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கபாலத்தில் பேருந்து விபத்து.

PUBLISHED:25-Sep-2017

 

பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கபாலத்தில் குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்தை ஓட்டுனர் திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து எதிர்புறம் பாலத்தின் சுவர் மீது மோதியது. இதில் ஓட்டுநர் லேசான காயமடைந்தார்.

சென்னை கண்ணகி நகரிலிருந்து பிராட்வே செல்லும் தடம் எண் 102 பேருந்து இன்று காலை கண்ணகி நகரிலிருந்து காமராஜர் சாலை வழியாக ராஜாஜி சாலை ரிசர்வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்றுக்கொண்டிருந்தது.

ஓட்டுனர் சீனிவாசன் பேருந்தை ஓட்டிச்சென்றார். பாலத்தில் வேகமாக பேருந்து இறங்கும் போது முன்னால் சென்ற இருசக்கர வாகனம் ஒன்று திடீரென குறுக்கே புகுந்தது. இதனால் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் சீனிவாசன் பேருந்தை வலது புறம் திருப்பினார். இதில் அவரது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென சாலையின் தடுப்பின் மீது ஏறி மறுபக்க சாலையின் குறுக்கே புகுந்து பாலத்தின் சுவர் மீது மோதி நின்றது.

எதிரில் வாகனங்கள் எதுவும் வராததால் பெரிய விபத்தும் உயிர்சேதமும் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் பேருந்து வேகமாக மோதியதில் முன்பக்க கண்ணாடி உடைந்து ஓட்டுநர் சீனிவாசனுக்கு காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து பூக்கடை போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடத்துனர் அமாவாசையிடம் விசாரணை நடத்தினர்.

பேருந்து குறுக்கே புகுந்ததால் ராயபுரத்திலிருந்து கடற்கரை நோக்கி காமாராஜர் சாலை, போர் நினைவுச்சின்னம் நோக்கி செல்லும் வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை. பின்னர் ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டு பேருந்து தூக்கி நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




Recommended For You