PublicNewsTv-போலீசாருக்கு சவால் விடுத்த கொலையாளி கைது.

PublicNewsTv-போலீசாருக்கு சவால் விடுத்த கொலையாளி கைது.

PUBLISHED:02-Oct-2017

டெய்லரை கொலை செய்து சினிமா பாணியில் உடலை 6 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய கறிக்கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.

சென்னை முகப்பேர் மேற்கு, 3-வது பிளாக்கில் உள்ள மீன் மார்க்கெட் பின்புறம் உள்ள மழைநீர் கால்வாயில் கடந்த 26-ம் தேதி தலை, கை, கால்கள் இல்லாத சடலம் ஒன்று வெள்ளை கோணிப்பையில் கட்டி வீசப்பட்டிருந்தது. உடலின் இடது மற்றும் வலது கால்கள், தலை ஆகியவை வெவ்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டன. சினிமா பாணியில் இக்கொலை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நொளம்பூர் போலீஸார் தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். இந்நிலையில்தான் நொளம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சமுக சிவன் கோயில் அருகே உள்ள டெய்லர் கடை ஊழியர் பாபு (45) என்பவரும், எதிரில் சிக்கன் மற்றும் மட்டன் கடை ஊழியரான பல்லாவரத்தைச் சேர்ந்த முகமது ரசூல் (22) என்பவரும் காணாமல் போனது தெரியவந்தது. இதில் ரசூல் உயிருடன் இருப்பது தெரியவந்தது.

தொடர் விசாரணயில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பல்லாவரத்தில் பதுங்கி இருந்த ரசூலை போலீஸார் பிடித்தனர். விசாரணையில் பாபுவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து வட சென்னை கூடுதல் காவல் ஆணையர் ஜெய்ராம், இணை ஆணையர் சந்தோஷ்குமார், அண்ணா நகர் துணை ஆணையர் எம்.சுதாகர் ஆகியோர் கூறும்போது, "எங்களது யூகத்தின்படி பாபுவை கறிக்கடையில் வேலை செய்து வந்த முகமது ரசூல் கொலை செய்துள்ளார். இரண்டு பேரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.

கொலை நடந்த கடந்த 25-ம் தேதி இருவரும் கறிக்கடையில் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, பாபு கடன் கேட்டு நச்சரித்துள்ளார். ஏற்கெனவே, இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. இதனால், கோபம் அடைந்த முகமது ரசூல், பாபுவை தாக்கியுள்ளார். இதில், அவர் எதிர்பாராமல் உயிரிழந்துள்ளார். கொலையை மறைக்க முடிவு செய்த முகமது ரசூல் ஆட்டை துண்டு துண்டாக வெட்டுவது போல் பாபு சடலத்தை தலை, கை, கால்கள் என தனித்தனியாக 6 துண்டாக்கியுள்ளார். பின்னர், உடல் பாகத்தை வெவ்வேறு பகுதியில் வீசியுள்ளார். முகமது ரசூல் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் உள்ளன என்றனர். கொலை செய்யப்பட்ட பாபு திருவேற்காட்டைச் சேர்ந்தவர். 6 ஆண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்து தனியாக தங்கி இருந்தார்.                   

கொலை நடந்து சில நாட்களேயான நிலையில் சவாலான கொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய ஆய்வாளர் கிருஷ்ண மூர்த்தி தலைமையிலான தனிப்படையினரை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டியுள்ளார்.




Recommended For You