PublicNewsTv- டிடிவி தினகரன், புகழேந்தி ஆகிய இருவரையும் இன்று கைது செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்.

PublicNewsTv- டிடிவி தினகரன், புகழேந்தி ஆகிய இருவரையும் இன்று கைது செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்.

PUBLISHED:03-Oct-2017

சென்னை

மத்திய, மாநில அரசுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் வழங்கிய புகார்   மீதான வழக்கில் டிடிவி தினகரன், புகழேந்தியை கைது செய்ய தனிப்படை அமைப்பினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். 'நீட்' தேர்வு குறித்து தமிழக அரசுக்கு எதிராகவும், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் சேலத்தில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததாக, அதிமுக (அம்மா) அணி துணைப் பொதுச் செயலர் டிடிவி.தினகரன் உள்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்  எஸ்.சி. வெங்கடாசலம் , எஸ்.கே.செல்வம் ஆகியோர் டிடிவி. தினகரன் அணியில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இவர்களில், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக எஸ்.சி.வெங்கடாசலமும், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக எஸ்.கே.செல்வமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தாதகாபட்டியில் செப்டம்பர் 29-இல் எஸ்.சி.வெங்கடாசலம் உள்ளிட்ட சிலர் நீட் தேர்வு குறித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கியுள்ளனர். இதில், தமிழக அரசுக்கு எதிராகவும், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் வாசகங்கள் இடம் பெற்றிருந்ததாகவும், இதுகுறித்து கேட்டதற்கு தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அஸ்தம்பட்டி பகுதி அதிமுக செயலாளர் சரவணன் அஸ்தம்பட்டி போலீஸில் புகார் செய்துள்ளார்.

இதுகுறித்து, டி.டி.வி. தினகரன், பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேல், கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், செல்வம் உள்ளிட்ட 17 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, எஸ்.சி.வெங்கடாசலம் (63), சந்திரன் (52), சூரியா (18), கலைவாணி (32) ஆகிய 4 பேரை திங்கள்கிழமை கைது செய்தனர்.

இந்நிலையில், மத்திய, மாநில அரசுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் வழங்கிய புகார் மீதான  வழக்கில் டிடிவி தினகரன் மற்றும் புகழேந்தியை கைது செய்ய தனிப்படை அமைப்பினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் இன்று மாலைக்குள் தினகரன் மற்றும் புகழேந்தியை கைது செய்துவிடுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. 




Recommended For You