PublicNewsTv- சென்னையில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடி உத்தரவு.

PublicNewsTv- சென்னையில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடி உத்தரவு.

PUBLISHED:07-Oct-2017

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தீவிரப்படுத்தி உள்ளார். தீபாவளித் திருடர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகை வரும் 18-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவது வழக்கம். இதற்காக தியாகராய நகர், புரசைவாக்கம், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் திரள்வார்கள்.

இதைப் பயன்படுத்தி திருடர்கள் கைவரிசையில் ஈடுபடுவார்கள். இதை முற்றிலும் தடுத்து நிறுத்த காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தியாகராய நகரில் 560 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாம்பலம் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் 20 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மக்களோடு மக்களாக...

இவர்கள் சாதாரண உடையில் மக்களோடு மக்களாக கலந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். இதுபோக 200 கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் மீது நின்றவாறு தொலை நோக்கு கருவி மூலம் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

இதேபோல் புரசைவாக்கத்தில் 230 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இங்கும் 3 தற்காலிக கண் காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்யப்பட உள்ளது.

வேளச்சேரி, தாம்பரம், வண்ணாரப்பேட்டை, பூக்கடை, கோயம்பேடு பேருந்து நிலையம், சிஎம்பிடி, மதுரவாயல், திருமங்கலத்திலும் இதேபோல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள நகைக்கடைகள், ஜவுளிக் கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.




Recommended For You