PublicNewsTv-சென்னை காசிமேடு போராட்டத்திற்கு மீன்வளத்துறை அமைச்சர் தான் காரணம்!!?.

PublicNewsTv-சென்னை காசிமேடு போராட்டத்திற்கு மீன்வளத்துறை அமைச்சர் தான் காரணம்!!?.

PUBLISHED:23-Oct-2017
சென்னை காசிமேடு  மீன்பிடி துறைமுகத்தில்  காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள், விசை படகு மூலம் மீன் பிடிக்க சிறிய இன்ஜின்தான் பயன்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் ஒரு சில மீனவர்கள் அதிக திறன் கொண்ட இன்ஜினை பயன்படுத்துகின்றனர். இதனால் மீன் இனங்கள் அழியும் நிலை உள்ளது.


இதனிடையே, அதிக திறன் கொண்ட இன்ஜின் படகை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் மீன் இனங்கள் அழிந்துவிடும் என ஒரு தரப்பு மீனவர்களும், குறைவான திறன் கொண்ட இன்ஜின் படகை பயன்படுத்தினால் மீன்கள் அதிகளவில் கிடைக்காது என மற்றொரு தரப்பு மீனவர்களும் கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த பிரச்னைக்கு தீர்வுகாண கோரி மீன்வளத்துறை இயக்குனர், மீன்வளத்துறை அமைச்சரிடம் மீனவர்கள் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக இரு தரப்பு மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மீன்பிடி துறைமுக போலீசார்  அதிக திறன் கொண்ட இன்ஜின் பயன்படுத்த தடை கோரி போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்களிடம், போராட்டத்தை கைவிடும்படி தெரிவித்தனர். 

ஆனால், அவர்கள் அதை ஏற்க மறுத்து, கோஷமிட்டனர். இதையடுத்து, 30க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்த போலீசார், மீன்பிடி துறைமுக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். தகவலறிந்து, விசைப்படகு  உரிமையாளர்கள், மீனவர்கள் 50க்கும் மேற்பட்டோர், காவல் நிலையத்தை  முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கைது செய்தவர்களை போலீசார் விடுவித்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 
இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘படகுகளில் அதிக திறன் கொண்ட இன்ஜின் பயன்படுத்துவதால் மீன் வளம் பாதிக்கப்படுகிறது. ஆனால், அவ்வாறு செயல்படுபவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாக உள்ளார். தற்போது, அமைச்சர் தூண்டுதலின் பேரிலேயே போலீசார் எங்களை தடியடி நடத்தி கைது செய்துள்ளனர். போராட்டத்தை கைவிடும்படி மிரட்டி வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வரை எங்களின் போராட்டம் தொடரும்  என்றனர்.




Recommended For You