PUBLIC NEWS TV- பருவமழை கால முன்னெச்சரிக்கை குறித்து சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ...!?

PUBLIC NEWS TV- பருவமழை கால முன்னெச்சரிக்கை குறித்து சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ...!?

PUBLISHED:27-Oct-2017

 பருவமழை காலதை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை  பாதுகாப்பு  நடவடிக்கை குறித்து சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் கலந்துக்கொண்டார்.

தமிழகத்தில் ஓரிரு தினங்களில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து  சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், தலைமையில் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் உள்பட பலர் கலந்து  கொண்டனர்.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் சென்னை பெருநகரில் மழைவருவதற்கு முன்னும், மழையின் போதும், மழைநின்ற பிறகும் காவல் துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், மற்றும் இதர துறை ஊழியர்களும் இணைந்து பணியாற்றுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 

மேலும் சென்னை பெருநகரில் பருவ மழை குறித்து புகார் மற்றும் தகவல்களைப் பெற ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை அமைப்பது பற்றியும், தாழ்வான பகுதிகள், பழுதடைந்த கட்டிடங்கள், பற்றிய விபரங்களை சேகரித்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது.

சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுப்பது, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை கண்டறிந்து அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தல், மிதவைகள், படகு, ஜெ.சி.பி இயந்திரம், கிரேன் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருத்தல், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்தல், தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களை கண்டறிந்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல்.

வெள்ளத்தின் போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் உணவு வழங்க ஏற்பாடு செய்தல்.புயல் மற்றும் பெரும் மழையில் மின்சார வயர் அறுந்து விழுந்து விபத்து ஏற்படாவண்ணம் மின்வாரியத்துடன் தொடர்பு ஏற்படுத்தி நடவடிக்கை எடுத்தல்

புயல் மற்றும் மழையில் சாலையில் விழும் மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி தடையில்லா போக்குவரத்திற்கு வழிவகை செய்தல்.

பெருநகர மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுதல். சுகாதாரதுறையினருடன் இணைந்து பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் நோய் தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளுதல். கால்நடைகளுக்கு உரிய பாதுகாப்பு அளித்தல். மழைநீர் வேகமாக செல்வதற்கு இணைப்பு கால்வாய்களை கண்டறிந்து சீர் செய்தல். பெருநகர சென்னை மாநகராட்சி, காவல் துறை, மின்சாரத்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் சார்ந்த இதர பிற துறைகளுடன் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தி இயற்கை சவால்களை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகள் செய்வது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.




Recommended For You