PUBLIC NEWS TV-நாட்டிலேயே காலாவதியான பேருந்துகளை இயக்குவதில் தமிழகம் 2-வது இடம் பிடித்துள்ளது.

PUBLIC NEWS TV-நாட்டிலேயே காலாவதியான பேருந்துகளை இயக்குவதில் தமிழகம் 2-வது இடம் பிடித்துள்ளது.

PUBLISHED:09-Nov-2017

நாட்டிலேயே காலாவதியான பேருந்துகளை இயக்குவதில் தமிழகம் 2-வது இடம் பிடித்துள்ளது. இதேபோல், மற்ற மாநகரங்களைக் காட்டிலும் சென்னையில்தான் அதிகபட்சமாக 72 சதவீதம் பேருந்துகள் காலம் கடந்து இயக்கப்படுவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2015-16-ம் ஆண்டில் நாட்டின் பொது போக்குவரத்து செயல்பாடுகள் தொடர்பான அறிக்கையை மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. நாடுமுழுவதும் செயல்படும் 47 போக்குவரத்து கழகங்களின் செலவு, வருவாய், பேருந்துகள் இயக்க செயல்பாடுகள், விபத்துகள், காலாவதியான பேருந்துகள் எண்ணிக்கை உட்பட பல்வேறு விபரங்கள் இதில் விரிவாக இடம் பெற்றுள்ளன.

மாநிலங்களின் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,42,855 பேருந்துகள் உள்ளன. இதில் 1,29,179 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. 2015-16-ல் மொத்த வருவாய் ரூ.51,748 கோடியாகும். ஆனால், செலவினம் ரூ.64,377 கோடியாகும். போக்குவரத்து ஊழியர்களின் எண்ணிக்கை 0.47 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சில போக்குவரத்துக் கழகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

2015-16-ல் ஒட்டுமொத்த அரசுப் பேருந்துகளின் மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 19,076-ல் இருந்து 18,768 ஆக குறைந்துள்ளது. உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்து எண்ணிக்கையும் 4,129-ல் இருந்து 4,050 ஆக குறைந்துள்ளது.

ஒரு பேருந்தை 5 லட்சம் கி.மீ. வரை ஓட்டலாம் அல்லது 8 ஆண்டுகள் வரையில் பயன்படுத்தலாம். அதன்பிறகு அந்தப் பேருந்து காலாவதியான பேருந்தாக மாறி விடுகிறது. காலம் கடந்து பேருந்துகளை இயக்குவதால், அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகள், இன்ஜின் கோளாறுகள் ஏற்படுவதுடன், எரிபொருளும் விரயமாகிறது. மேலும், மேற்கூரைகள் பழுதாகுதல், பிரேக் பிடிப்பதில் சிரமம் ஏற்படுவதால் சாலை விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

நாட்டிலேயே காலம் கடந்து இயக்கப்படும் பேருந்துகளின் பட்டியலில் பிஹார் முதலிடத்தில் இருக்கிறது. அங்குள்ள அரசு பேருந்துகள் 100 சதவீதம் (12 ஆண்டுகள்) காலம் கடந்து இயக்கப்படுகின்றன.

இதற்கு, அடுத்து 2-வது இடத்தில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகமும், 3-வது இடத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமும், 4-வது இடத்தில் சண்டிகர் போக்குவரத்து கழகமும், 5-வது இடத்தில் சேலம் போக்குவரத்து கழகமும் உள்ளன. அகமதாபாத், மும்பை, ஹரியாணா, மஹாராஷ்டிரா ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் பழைய பேருந்துகள் மிகவும் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மாநில அரசுகள் வழங்க வேண்டிய நிதி, மானியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும், இழப்பை சரிசெய்யும் அளவுக்கு போதிய அளவில் அரசு நிதி வழங்குவதில்லை. சில போக்குவரத்து கழகங்களில், கணிசமான அளவுக்கு கட்டண உயர்வு செய்யாததால், நிதி நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் உள்ள 8 மாநகர போக்குவரத்துக் கழகங்களில் ஒரு நாளைக்கு ஒரு மாநகரப் பேருந்தில் அதிகம் பயணம் செய்வோரின் பட்டியல் வெளியிட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தான் அதிக அளவில் மக்கள் பயணம் செய்து வருகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு பேருந்தில் சராசரியாக 1,270 பேர் பயணம் செய்கின்றனர். ஒரு நாளைக்கு ஒரு பேருந்தில் மிகவும் குறைவாக (298 பேர்) இருப்போரின் பட்டியலில் சண்டிகர் போக்குவரத்து கழகம் உள்ளது.




Recommended For You