PublicNewsTv-வருமானவரி சோதனையில் சிக்கிய பணத்தை மக்களிடமே வழங்க ராமதாஸ் வேண்டுகோள்?.

PublicNewsTv-வருமானவரி சோதனையில் சிக்கிய பணத்தை மக்களிடமே வழங்க ராமதாஸ் வேண்டுகோள்?.

PUBLISHED:13-Nov-2017

சசிகலா மேலும் பல சொத்துக்களை வாங்கிக் குவித்த போதும், அவற்றை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததன் மூலம், அவற்றுக்கெல்லாம் வருமானவரித்துறை உதவியாகவே இருந்தது.

1991-96 ஆட்சிக் காலத்தில் கண்ணில் பட்ட இடங்களையெல்லாம் ஜெயலலிதா ஆசியுடன் சசிகலா வளைத்தார். அமைச்சர்களுக்கு இலக்கு நிர்ணயித்து ஊழல் பணத்தை வசூலித்தார். கொடநாடு தேயிலைத் தோட்டம், சிறுதாவூர் மாளிகை, பையனூர் மாளிகை உள்ளிட்ட சொத்துக்கள் இந்தக் காலத்தில் வளைக்கப்பட்டவை தான். அந்தக் காலத்தில் ஊழல் மூலம் குவிக்கப்பட்ட சொத்துக்களில் ஒரு பகுதி மட்டுமே கையூட்டுத் தடுப்புப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.

சசிகலாவும் அவரது உறவினர்களுக்கு இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருப்பதற்கான அந்த வழக்கில் சிக்கிய சொத்துக்களின் இன்றைய சந்தை மதிப்பு மட்டும் ரூ.30 ஆயிரம் கோடிக்கும் அதிகமாகும். அதற்கு பிந்தைய 10 ஆண்டுகளில் அதைவிட 100 மடங்கு சொத்துக்களை அவர்கள் சேர்த்துள்ளனர். சசிகலாவின் உறவினர் தினகரன் மூலமாக உலகம் முழுவதும் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர்.

சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் ஊழல் செய்து குவித்து வைத்துள்ள பணம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு பல லட்சம் கோடிகளாகும். அவற்றை அவர்கள் தனியாக குவித்து விடவில்லை.

2011-16 ஆட்சிக் காலத்தில் தான் ஊழல் பூதம் உச்சக் கட்டத்தில் ஆட்டமாடியது. அதை ஆட்டுவித்தவர்கள் சசிகலாவும், அந்த ஆட்சியில் மூத்த அமைச்சர்களாக இருப்பவர்களும் தான். அந்த ஆட்சியின் தொடக்கத்தில் தமிழக அரசின் நேரடிக்கடன் ரூ.1.01 லட்சம் கோடியாகத் தான் இருந்தது. இப்போது ரூ.3.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இடைப்பட்டக் காலத்தில் அணைகள், தடுப்பணைகள், கல்லூரிகள், பாசனத் திட்டங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் எதுவும் ஏற்படுத்தப்படாத நிலையில், கடனாக வாங்கப்பட்ட நிதி முழுவதும் ஊழல் வழியில் சசிகலா மற்றும் அமைச்சர்கள் குடும்பங்களிடம் சேர்க்கப்பட்டிருக்கிறது.

வருமான வரி சோதனை நடத்தி, அதில் கண்டுபிடிக்கப்படும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்களுக்கு தண்டம் விதித்து அவற்றை சட்டப்பூர்வ சொத்துக்களாக மாற்ற அனுமதிக்கக்கூடாது. ஊழல் மூலம் குவித்த சொத்துக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவற்றை மீட்டு வர வேண்டும். ஏனெனில், தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஊழல் மூலம் சுரண்டப்பட்டது முழுவதும் மக்களின் வரிப்பணம் தான்.

அந்த பணம் மீண்டும் அவர்களுக்கே சென்று சேர வேண்டும். அதற்காக, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் அரசை உடனடியாக அகற்ற வேண்டும். கடந்த காலங்களில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தி, கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் வரிப் பணத்தை மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.




Recommended For You