PublicNewsTv-கார்த்திகை மாதம் தொடங்கப்போகிறது.சுவாமியே சரணம் ஐயப்பனின் சிறப்புகள்.

PublicNewsTv-கார்த்திகை மாதம் தொடங்கப்போகிறது.சுவாமியே சரணம் ஐயப்பனின் சிறப்புகள்.

PUBLISHED:16-Nov-2017

சுவாமியே சரணம் ஐயப்பா! கார்த்திகை மாதம் தொடங்கப்போகிறது. இனி திரும்பிய பக்கமெல்லாம் இந்த பக்தி கோஷம் ஒலிக்கத் தொடங்கிவிடும். தாய், தந்தை மீது மிகுந்த பக்தி வைத்திருந்தவர் ஐயன் என்பதால், பெற்றோரை மதித்து நடப்பது ஐயப்ப பக்தரின் முக்கியக் கடமையாகக் கருதப்படுகிறது. தாய், தந்தையின் பரிபூரண அனுமதியுடன் மட்டுமே எந்தவொரு பக்தரும் மாலை அணிய வேண்டும் என்பது முக்கியமான நெறிமுறை.

ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் இருந்து சபரிமலைக்குச் செல்வது சிறப்பு. கார்த்திகை முதல் நாள் மாலை அணிய ஏற்ற நாள். நவம்பர் 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கார்த்திகை மாதம் பிறக்கிறது. இந்த நாளில் மாலை அணிவது சிறப்பு. ஐயப்பன்மார்கள் தங்களது குருசாமியின் கையால் மாலை அணியலாம். அல்லது தாய், தந்தையை வணங்கி வீட்டிலேயேகூட மாலை அணிந்துகொள்ளலாம்.

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டதும், உடலின் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியதுமான சந்தனம் அல்லது துளசி மணியால் ஆன மாலைகளை அணியவேண்டும். பிரதான மாலையாக ஒன்று, துணை மாலையாக ஒன்று என மொத்தம் 2 மாலைகள் அணியவேண்டும். ஒவ்வொன்றிலும் 108 அல்லது 54 மணிகள் இருக்கும். மாலைகளில் ஐயப்பன் பதக்கமும் (டாலர்) அணியவேண்டும்.

‘ஞானமுத்ராம் சாஸ்த்ருமுத்ராம் குருமுத்ராம் நமாம்யஹம்

வனமுத்ராம் சுத்தமுத்ராம் ருத்ரமுத்ராம் நமாம்யஹம்

சாந்தமுத்ராம் சத்யமுத்ராம் விரதமுத்ராம் நமாம்யஹம்

சபர்யாஸ்ரம சத்யேனமுத்ராம் பாதுஸதாபிமே

குருதட்சிணயாபூர்வம் தஸ்யானுக்ரஹ காரிணே

சரணாகத முத்ராக்யம் த்வன்முத்ராம் தாரயாம்யஹம்

சின்முத்ராம் கேசரீமுத்ராம் பத்ரமுத்ராம் நமாம்யஹம்

சபரியாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம

 என்ற மந்திரத்தைச் சொல்லி மாலை அணிவது வழக்கம்.

மாலை அணிந்துகொண்ட பக்தர்கள் தினமும் இரண்டு வேளை குளித்து நெற்றியில் சந்தனம், குங்குமம் தரிக்க வேண்டும். பின்னர், 108 சரண கோஷங்களைக் கூறி ஐயப்பனை வழிபட வேண்டும்.

முதல்முறையாக மலைக்குச் செல்லும் கன்னிசாமிகள் கருப்பு நிற வேட்டி, துண்டு, சட்டை அணிய வேண்டும். மற்றவர்கள் கறுப்பு, நீலம், காவி நிறங்களில் அணியலாம்.

விரத காலத்தில் சுக துக்க நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது. மது, புகை, பான், அசைவம் சாப்பிடுவது, செருப்பு அணிவது, முடி திருத்துவது, சவரம் செய்வது, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சினிமா பார்ப்பது கூடாது. படுக்கை, தலையணை பயன்படுத்தாமல் பிளாஸ்டிக் விரிப்பு அல்லது துண்டு விரித்துப் படுக்கலாம். தனிப் போர்வை பயன்படுத்தலாம்.

வருத்திக் கொள்வதற்கல்ல நியமங்கள்

உடம்பும் கோயில்தான். எனவே, நீரிழிவு நோயாளிகள் போன்றவர்கள் வழக்கம்போல சாப்பிடுவதும் தவறல்ல. செய்யும் தொழிலும் தெய்வம். எனவே, ராணுவம், காவல், ஆலைகள், ரசாயனக் கூடங்களில் பணியாற்றும் பக்தர்கள் ஷூ அணிவது தவறில்லை. விரதங்கள் அனைத்தும் உடலோடு சேர்த்து மனதை பக்குவப்படுத்தவே தவிர, வருத்திக்கொள்ள அல்ல!

பேச்சு, உணவில் கட்டுப்பாடு அவசியம். யாரிடமும் கடும்சொல், கோபம் கூடாது. நமது பக்தி மற்றவர்களுக்கு இடைஞ்சல் தரும் விதமாக இருக்கக் கூடாது. பெண்களை தவறான நோக்கத்தில் பார்க்கக் கூடாது. விலகல் நாட்களில் பெண்களைப் பார்ப்பது, அவர்கள் சமைப்பதை சாப்பிடுவது கூடாது. மனம், சொல், செயல் தூய்மையுடன் முழு புலனடக்கம் கடைபிடிக்க வேண்டும்.

சபரி யாத்திரை புறப்படும் முன்பு, வீட்டில் ஒருநாள் எளிமையாக பூஜை நடத்தி, சக ஐயப்ப சாமிகள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்.

பதினெட்டு படிகளின் தத்துவம்!

பதினெட்டு என்ற எண்ணுக்கு இந்து மதத்தில் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. பகவத் கீதையின் அத்தியாயங்கள், தேவாசுர யுத்தம் நடந்த ஆண்டுகள், ராம - ராவணப் போர் நடந்த மாதங்கள், குருக்ஷேத்திரப் போர் நடந்த நாட்கள் மட்டுமின்றி ஆகமங்கள், சித்தர்கள் எண்ணிக்கை இவை எல்லாமே பதினெட்டுதான். அதேபோல, சபரிமலையில் பதினெட்டாம் படியில் வீற்றிருந்து அருள் தருகிறார் ஐயப்பன்.

 

பதினெட்டு யோகங்கள்

நாம் செய்யும் நல்லது, கெட்டதே புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் - விஷாத யோகம்.

பரமாத்வே குரு - சாங்கிய யோகம்.

பலனை எதிர்பாராமல் கடமையைச் செய் - கர்மயோகம்.

பாவ, புண்ணியம் பற்றிக்கூட கவலைப்படாமல் பரமனை நினை - ஞானகர்ம சன்னியாச யோகம்.

தர்மம் செய் - சன்னியாச யோகம்.

புலன்களைக் கட்டுப்படுத்து - தியான யோகம்.

எல்லாமும் எல்லோரும் கடவுளே - ஞான யோகம்.

வேறு சிந்தனையின்றி இறைவனையே நினை - 

அட்சரபிரம்ம யோகம்.

சமூகத் தொண்டே பக்தி - ராஜவித்யா ராஜ குஹ்ய யோகம்.

அனைத்து அழகிலும் இறைவனைப் பார் - விபூதி யோகம்.

இறைவனும் உலகமும் ஒன்றே - விஸ்வரூப தரிசன யோகம்.

அனைத்திலும் சமத்துவம் விரும்பு - பக்தி யோகம்.

எல்லா உயிர்களையும் இறைவனே இயக்குகிறார் - ஷேத்ரக்ஞ விபாக யோகம்.

பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் வரும் துன்பங்களுக்கு ஆட்படாதே - குணத்ர விபாக யோகம்.

தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை வளர்த்துக்கொள் - தெய்வாசுர விபாக யோகம்.

இறைவன் படைப்பில் அனைவரும், அனைத்தும் சமம் - சம்பத் விபாக யோகம்.

எல்லாம் பரப்பிரம்மமே - சிரித்தாத்ரய விபாக யோகம்.

இறைவனிடம் சரணாகதி அடை - மோட்ச சன்யாச யோகம்.

இத்தனை யோகங்களும் நிரம்பப் பெற்று ஹரிஹர சுதனாக, கலியுக வரதனாக, கண்கண்ட தெய்வமாக சபரிமலையில் காட்சி தருகிறார் ஐயப்பன். அவரது பக்தர்களும் ஒரு மண்டல கால விரதமிருந்து, உடலோடு மனதையும் பக்குவப்படுத்தி, அனைத்து நற்குணங்களையும் வளர்த்துக்கொண்டு, வாழ்வில் உயர வேண்டும் என்பதே பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.




Recommended For You