PUBLIC NEWS TV- குற்றவாளிகளைப் பிடிக்க புதிய ஆப் அறிமுகம் இதுவரை 8 பேர், பிடிபட்டனர்.

PUBLIC NEWS TV- குற்றவாளிகளைப் பிடிக்க புதிய ஆப் அறிமுகம் இதுவரை 8 பேர், பிடிபட்டனர்.

PUBLISHED:17-Nov-2017

சென்னை:-

தேடப்படும் குற்றவாளிகளை எளிதில் பிடிக்க, புதிய செல்போன் ‛ஆப்' வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனை செயல்பாட்டின் போதே 8 குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.

இது குறித்து சென்னை தி.நகர் போலீஸ் துணை கமிஷ்னர் அரவிந்தன் கூறுகையில்.

‛‛தேடப்படும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக ‛ஆப்'பை சென்னை போலீசார் வடிவமைத்துள்ளனர். இதில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார், சந்தேப்படும் படியான நபரை தங்கள் செல்போனில் உள்ள அந்த ‛ஆப்' மூலம் புகைப்படம் எடுத்து பதிவேற்றினால், சர்வரில் உள்ள தேடப்படும் குற்றவாளியின் அங்க அடையாளங்களுடன் ஒப்பிட்டு 10 விநாடிகளில் அவர் தேடப்படும் குற்றவாளியா என்ற தகவல் போலீசாருக்கு சென்று விடும். அதன் மூலம் பிடிபட்ட நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க முடியும்.

தற்போது இந்த ‛ஆப்' சென்னை தி.நகரில் உள்ள 500 போலீசாரின் செல்போன்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆப் மூலம் எடுக்கும் புகைப்படங்கள் அனைத்தும் போலீசாரின் சர்வரில் பதிவாகிவிடும். இதன்மூலம் இந்த ஆப்பை பயன்படுத்தி போலீசாரும் தவறான செயல்களில் ஈடுபட முடியாது.

இது கடந்த நவம்பர்,1ம் தேதி முதல் சோதனை முறையில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த 15 நாட்களில் மட்டும் 8 தேடப்படும் குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர். இது வெற்றியடையும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் இந்த செயல்பாடு விரிவு படுத்தப்படும். '' இவ்வாறு அவர் கூறினார்.




Recommended For You