PUBLIC NEWS TV-இடைதேர்தலில் தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்குமா!?.

PUBLIC NEWS TV-இடைதேர்தலில் தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்குமா!?.

PUBLISHED:26-Nov-2017

சென்னை;-

இடைத்தேர்தலில் டிடிவி தினகரனோ அல்லது அவரது வேட்பாளரோ சுயேச்சையாகத்தான் போட்டியிட முடியும் என்பதால் அவருக்கு தொப்பி சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரலில் நடக்கவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அதிமுகவில் இரண்டு அணிகள் போட்டியிட்டன. இருவரும் இரட்டை இலை சின்னத்தை கேட்டதால் சின்னத்தையும், கட்சிப் பெயரையும் தேர்தல் ஆணையம் தற்காலிகமாக முடக்கியது. ஓபிஎஸ் அணி வேட்பாளர் இ.மதுசூதனன், இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்திலும், டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்திலும் போட்டியிட்டனர். ஆனால், பணப் பட்டுவாடா புகாரால் கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தற்போது அங்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் - முதல்வர் கே.பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. ஆனால், அதிமுக அம்மா என்ற கட்சிக்கு அங்கீகாரம் இல்லை என்பதால் டி.டி.வி.தினகரனோ அல்லது அவரது ஆதரவு வேட்பாளரோ சுயேச்சையாகவே போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், தொப்பி சின்னத்தை அவர்கள் மீண்டும் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ஒரு புதிய கட்சி தொடங்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தால், அக்கட்சி உடனடியாக பதிவு செய்யப்படும். ஆனால், தொடங்கப்படும் கட்சி சார்பில், அப்போது நடக்கும் தேர்தலில் 12 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.

அப்போதுதான் ஒரே சின்னம் கிடைக்கும். தற்போது நடப்பது இடைத்தேர்தல் என்பதால், அந்த விதி பொருந்தாது.

டி.டி.வி.தினகரனோ, அவரது ஆதரவாளரோ ஆர்.கே.நகரில் போட்டியிடும் பட்சத்தில், சுயேச்சை வேட்பாளராகவே நிற்க முடியும். அப்போது அவர்கள் தொப்பி சின்னத்தை கோரினால், வேறு யாரும் கேட்காத பட்சத்தில் அந்தச் சின்னம் அவர்களுக்கு ஒதுக்கப்படும்.

ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அந்தச் சின்னத்தை கோரினால், குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் அதிர்ஷ்டம் இருந்தால்தான் மீண்டும் தொப்பி சின்னத்தை தினகரன் பெற முடியும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.




Recommended For You