PublicNewsTv- ஊழலை தடுக்க ஏன் புதிய சட்டம் கொண்டுவரக்கூடாது, தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி?.

PublicNewsTv- ஊழலை தடுக்க ஏன் புதிய சட்டம் கொண்டுவரக்கூடாது, தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி?.

PUBLISHED:06-Dec-2017


சென்னை, 
சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் பூபதி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘எங்களது தாத்தாவின் சொத்துகளை பாகப்பிரிவினை செய்து, பத்திரப்பதிவு செய்தோம். முறையான முத்திரைக் கட்டணம் செலுத்தியும் பம்மல் சார் பதிவாளர் பத்திரப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறார்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். அப்போது மனுதாரரின் வக்கீல் என்.சுரேஷ், ‘லஞ்சம் கொடுக்கவில்லை என்பதால் முறையான முத்திரைக் கட்டணம் செலுத்தியும், பத்திரப்பதிவை செய்யாமல் சார் பதிவாளர் இழுத்தடித்தார். இதுபோல தான் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் நடைபெறுகிறது’ என்றார்.

நீதிபதி என்.கிருபாகரன், சில கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பாகப்பிரிவினை சொத்துகள் தொடர்பான பத்திரப்பதிவுகளை செய்து, அந்த பத்திரங்கள் நீதிபதி முன்னிலையில் மனுதாரரின் வக்கீலிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 10 ஆண்டுகளில் பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது? என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், அந்த கேள்விக்கு போலீசார் சரியான பதில் தரவில்லை.

போலீஸ் தரப்பில் தரப்பட்ட பதிலை ஆய்வு செய்தபோது, 10 ஆண்டுகளில் லஞ்சம் பெற்றதாக 77 பத்திரப்பதிவு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்குகளில் இருந்து பல அதிகாரிகள் விடுதலை ஆகியுள்ளனர்.
இந்த அதிகாரிகள் மீது எப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது? எப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்? என்பது போன்ற விவரங்களும் போலீசாரிடம் இல்லை. ஆசிய கண்டத்திலேயே ஊழல் நிறைந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று சர்வதேச ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அனைத்து அரசு துறைகளிலும் ஊழல் முறைகேடுகள் கண்மூடித்தனமாக நடைபெறுகின்றன.

நேர்மையான அதிகாரிகள் அரசு அதிகாரிகள் அன்றாட பணிகளை எல்லாம் லஞ்சம் பெற்றுக்கொண்டு தான் மேற்கொள்கின்றனர். மக்கள் வரிப்பணம் மூலம் அதிகாரிகளுக்கு மாதந்தோறும் சம்பளம் கொடுக்கப்பட்டாலும், அவர்கள் தங்களது கடமைகளை லஞ்சம் பெற்றுக்கொண்டு தான் செய்கின்றனர்.

அரசு ஊழியர்கள் ஒவ்வொரு பணிக்கு ஒவ்வொரு தொகையை மக்களிடம் இருந்து கட்டாயப்படுத்தி லஞ்சமாக பெறுகின்றனர். லஞ்ச ஊழலை தடுக்க வேண்டும். இதற்காக கடுமையான சட்டத்தை கொண்டுவர வேண்டும். அதேநேரம், நேர்மையான அதிகாரிகளும், ஊழியர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

லஞ்சம் வாங்கும் பொது ஊழியர்கள் (மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள்) மீது கடுமையான நடவடிக்கை எடுக்க குண்டர் தடுப்புச்சட்டத்தை போல, தனியாக தடுப்புச் சட்டம் கொண்டுவந்தால் என்ன? புதிய சட்டம் கொண்டுவரும் வரை, சமூகவிரோதிகள் மீது தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் குண்டர் தடுப்புச் சட்டத்தை பொது ஊழியர்கள் மீது ஏன் பயன் படுத்தக்கூடாது?
கடந்த 10 ஆண்டுகளில் அரசு அலுவலகங்களில் எத்தனை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? அவர்களிடம் இருந்து எவ்வளவு லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது? அதிகளவில் லஞ்சம் புழங்கும் முதல் 5 அரசு துறைகள் எவை?
லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தும்போது ஏற்படும் பிரச்சினைகள் என்ன? லஞ்ச ஒழிப்பு துறைக்கு போதிய நிதி ஒதுக்கப்படுகிறதா? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணையர், உள்துறை செயலாளர் ஆகியோர் வருகிற 11-ந் தேதிக்குள் பதிலளிக்கவேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். 

 




Recommended For You