சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. 50 பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்

சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. 50 பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்

PUBLISHED:06-Sep-2017

 

தாம்பரத்தில் இருந்து கோவளத்துக்கு புறப்பட்டுச் சென்ற மாநகரப் பேருந்து, பெருங்களத்தூரில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 50 பயணிகள் லேசான காயத்துடன் தப்பினர்.

தாம்பரத்தில் இருந்து கோவளத்துக்கு நேற்று காலை 9 மணி அளவில் மாநகரப் பேருந்து புறப்பட்டது. ஓட்டுநர் விஜயகுமார், நடத்துநர் சுரேஷ் ஆகியோர் பணியில் இருந்தனர். பெருங்களத்தூரில் பேருந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் ஒருவர் திடீரென குறுக்கே வந்தார். அவர் மீது மோதிவிடாமல் இருப்பதற்காக, ஓட்டுநர் விஜயகுமார் இடதுபக்கமாக திருப்பினார். அப்போது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த 5 அடி பள்ளத்துக்குள் பேருந்து பாய்ந்தது. இதில், 50 பயணிகள் லேசான காயத்துடன் தப்பினர்.

தகவல் கிடைத்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விரைந்து வந்தனர். காயமடைந்த பயணிகளை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, அனைத்து பயணிகளும் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து காரணமாக அப்பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராட்சத கிரேன்கள் கொண்டுவரப்பட்டு, பள்ளத்தில் இருந்து பேருந்து மீட்கப்பட்டது.




Recommended For You