PublicNewsTv-கடந்த 4 நாட்களில் சுமார் 2 லட்சம் பேர் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு வருகை.

PublicNewsTv-கடந்த 4 நாட்களில் சுமார் 2 லட்சம் பேர் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு வருகை.

PUBLISHED:10-Sep-2017

 

தமிழகம் முழுவதும் வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பது, பழகுநர் உரிமம் பெறுதல் உள்ளிட்ட பணிகளுக்காக கடந்த 4 நாட்களில் சுமார் 2 லட்சம் பேர் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு வருகை தந்துள்ளனர்.

வாகன ஓட்டுநர்கள் அனைவரும் தங்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று முதல் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆர்டிஓக்களிலும் கடந்த ஒரு வாரமாக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக, ஓட்டுநர் உரிமம் பெறுவது, ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பது, பழகுநர் உரிமம் பெறுவது என பல்வேறு பணிகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் ஆர்டிஓ அலுவலகத்துக்கு செல்கின்றனர். இந்நிலையில், மக்கள் பயன்பெறும் வகையில் விடுமுறை நாளான நேற்றும் அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களும் செயல்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களும் நேற்று இயங்கின.

இது தொடர்பாக போக்குவரத்து  அதிகாரிகள் கூறும்போது, “ஓட்டுநர் உரிமம் விவகாரம் காரணமாக கடந்த ஒரு வாரமாக ஆர்டிஓ அலுவலகங்களுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக வருகிறது. குறிப்பாக, கடந்த 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையில் மட்டுமே சுமார் 2 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். இதில், ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கவும், ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெறவும் அதிகளவில் மக்கள் வந்தனர்.’’ என்றனர்.




Recommended For You