மதுரை விமான நிலையத்தில் மூன்று பயணிகளிடம் இருந்து 2.13 கோடி ரூபாய் மதிப்புள்ள 7 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு, மதுரை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் மதுரை வந்த பயணிகளை சோதித்தனர். அதில் ஒருவர் காலில் காயம் அடைந்து கட்டு போட்டு இருப்பது போல் காட்சி அளித்தார். அவர் காலை சோதனை செய்ததில், நான்கு கிலோ தங்க கட்டிகள் சிக்கின. இரண்டு பயணிகள், இரண்டு ஆம்ளிபயர்களை கொண்டு வந்தனர்.
அத்துடன் அவர்கள் கொண்டு வந்த சேவிங் ரேசர்கள் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. அவற்றை சோதித்து பார்த்த போது, ஆப்ளிபயர்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 2.8 கிலோ தங்க கட்டிகள் சிக்கின.சேவிங் ரேசர் கைப்பிடியிலும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இவ்வாறு மூன்று பேரிடம் இருந்து 2.13 கோடி ரூபாய் மதிப்புள்ள 7.04 கிலோ தங்க கட்டிகள் சிக்கின.
மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.